Monday, June 21, 2010

World Trade Organization WTO

உலக வர்த்தக நிறுவனம் (World Trade Organization)


142 நாடுகள் உலக வர்த்தக நிறுவனத்தில் (World Trade Organization WTO) உறுப்பினராக இருக்கின்றன. கதார் நாட்டின் டோஹா நகரத்தில் இந்த நாடுகளின் மந்திரிகள் மாநாடு நான்காவது முறையாக இந்த வாரம் வெள்ளிக்கிழமை நடந்திருக்கிறது. (இந்தக்கட்டுரைSunday November 11, 2001 எழுதப்பட்டது). எதிர்பார்ப்பு : பல்முனை வர்த்தக ஒப்பந்தங்கள். ஆனால் பெரும் கருத்து வேறுபாடுகளினால் மீண்டும் ஒரு முறை சந்தித்துப் பேச வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.


உருகுவே நாட்டில் நடந்த ஒரு பேச்சுவார்த்தையின் பயனாக இந்த உலக வர்த்தக நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. இதில் ஒரு பேச்சுவார்த்தை முடிந்து முடிவுக்கு வர எட்டு வருடங்கள் ஆயின.


தென்னாப்பிரிக்காவின் வர்த்தக தொழில்துறை மந்திரி அலெக் எர்வின் அவர்கள் 'இன்னும் ஒரு சுற்றுப்பேச்சு இல்லையெனில், இந்த வர்த்தக நாடுகள் இந்த சுற்றுப்பேச்சிலிருந்து வெளியேறும் ' என்று எச்சரிக்கிறார். 'இன்றைய உலக வர்த்தக நிறுவனச் சட்டங்கள் எல்லா விஷயங்களையும் உள்ளடக்கியவை. இவை பலனளிக்கக் கூடியவை. இதற்கு மாற்று குழப்பம்தான் ' என்றும் எச்சரிக்கிறார்.


தென்னாப்பிரிக்காவும் இன்னும் சில வளரும் நாடுகளும் ( பிரேசில், நைஜீரியா, எகிப்து, அர்ஜன்டினா, சிலி ஆகியவை) ஒரு கூட்டணியை உருவாகி இருக்கின்றன. இது ஜீ- தெற்கு என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் குழு புதிய சுற்றுப்பேச்சு வார்த்தை ஆரம்பிக்க வேண்டுமென்று விரும்புகின்றன.


இதற்கு எதிராக 'Like-Minded Group ' என்றழைத்துக்கொள்ளும் ஒத்த கருத்துக்கள் உள்ள நாடுகள் கூட்டணி அமைத்திருக்கின்றன. இதில் இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், சிங்கப்பூர், போன்ற தெற்காசிய நாடுகளும், இன்னும் மற்ற ஆப்பிரிக்க நாடுகளும் மிகக்குறைந்த முன்னேற்றமே கொண்ட நாடுகளும் என்று சுமார் 49 நாடுகள் இணைந்திருக்கின்றன.


'ஒத்த கருத்து கூட்டணி ' கூறுவதென்னவென்றால், புது பேச்சுவார்த்தை சுற்று தேவையில்லை என்பதும், அப்படி புது பேச்சுவார்த்தை சுற்று வேண்டுமெனில் உலக வர்த்தக அமைப்பில் பெரும் மாறுதல்கள் நடந்ததன் பின்னரே அது நடக்க வேண்டுமென்றும் கோருகிறது. உலக மயமாதலின் விளைவாக, ஏழை நாடுகளின் வளர்ச்சி வீதம் பெருமளவு வீழ்ந்துவிட்டதால், சமமாக போட்டியிட முடியவில்லை. ஐரோப்பிய நாடுகள் விவசாயத்துக்கு கொடுக்கும் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மானியம் காரணமாக சமச்சீர்ப் போட்டி இல்லை என்று இவர்கள் கூறுகிறார்கள்.


உருகுவே நாட்டில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்பு நடந்த ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வ வேண்டி கேட்கின்றன. எவ்வாறு அவை நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டுமென்பது மட்டுமே விவாதிக்கப்பட வேண்டுமென்றும் கேட்கின்றன. இதற்குள் வருபவை 'அறிவுஜீவி சொத்துகள் intellectual property, விவசாயம், மான்யங்கள், ஏழை நாடுகளின் பொருட்களுக்கு கொடுக்க வேண்டிய பிரத்தியேக கோட்டா முறை ஆகியவை.


மறுபுறம், ஜி- தெற்கு நாடுகள் வளர்ந்த நாடுகளின் 'புதிய பிரச்னைகளை ' முன்னுக்குத் தள்ளுகின்றன. இவை முதலீடு, போட்டி, கொள்முதல், சுற்றுச்சூழல், தொழிலாளர் தகுதரம் போன்றவை.


இதைத் தாண்டி, கைர்ன்ஸ் குழு Cairns Group இருக்கிறது. இந்தக்குழு ஆஸ்திரேலியாவால் தலைமை தாங்கப்பட்டு, உலக விவசாய ஏற்றுமதி செய்யும் சுமார் 18 முக்கிய நாடுகளின் கூட்டணியாக இருக்கிறது. 1986இல் உருவாக்கப்பட்ட இந்தக்குழு விவசாயத்தை பன்முக வர்த்தக கோட்பாட்டின் உள்ளே வைக்கவும் அதை அங்கேயே இருத்திக்கொள்ளவும் முயன்று வெற்றி பெற்றிருக்கிறது. இது தொடர்ந்து விவசாயப்பொருள்கள் விற்பனை தாராளமயமாக்கப் பட வேண்டும் என்று தொடர்ந்து வறுபுறுத்தி வருகிறது. இந்தக்குழுவில் அர்ஜண்டினா, கனடா, இந்தோனேஷியா, மலேசியா நியூசிலாந்து போன்றவை அடக்கம்.


உலக வர்த்தக நிறுவனத்தின் பேச்சுக்களில் விவசாயம் தொடர்ந்து பிரச்னைக்குள்ளான விஷயமாக இருந்து வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பா ஜப்பான் போன்ற நாடுகளின் விவசாயப்பொருள்கள் இறக்குமதிக் கட்டுப்பாடுகளால் பெருமளவு பாதிக்கப்படுகிறது.


டோஹா மந்திரிகள் மாநாட்டிலிருந்து வெளிவரக்கூடிய முக்கியமான ஆவணம், மந்திரிகளின் அறிக்கை. இந்த அறிக்கையே உலக வர்த்தக நிறுவனத்தின் வேலையையும், அது எந்த அளவு அதன் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவரும் என்பதையும் குறிக்கும். தோஹாவில் அமைச்சர்கள் தரும் முதல் நகலை விவாதிப்பார்கள் . உலக வர்த்தக அமைப்பு பொதுக் குழுவின் தலைவர், உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குனர் , உலக வர்த்தக அமைப்பு ஏற்றுக் கொள்ளும் ஒரு ஆவணத்தை விவாதித்து உருவாக்குவார்கள். மேற்கொண்டு விவாதம் இதனை அடிப்படையாய்க் கொண்டு அமையும் என்பதால் இந்த முதல் நகல் மிக முக்கியமானது.


No comments:

Post a Comment